அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை ஆகிய தாலுக்கா பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் முந்திரி காடுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வனத்துறை அதிகாரிகள் முந்திரி காடுகளை ஏலம் விடுவார்கள். அதை முந்திரி வனக்காடுகளை ஒட்டி உள்ள கிராம முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக ஏலம் எடுப்பார்கள். ஏலம் எடுத்த காடுகளில் காய்க்கும் முந்திரி கொட்டைகளை கூலிக்கு ஆட்களை வைத்துப் பொறுக்கி சேகரித்து பிறகு அதை மொத்தமாக விற்று அதில் கிடைக்கும் பணத்தை ஏலம் எடுத்த ஊர் முக்கியஸ்தர்கள் பங்கிட்டு கொள்வார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெறும்.
அதன்படி ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கு தோண்டி கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1000 ஏக்கர் முந்திரி காடுகளை ஏலம் எடுப்பதற்கு முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் சகோதரர் சகாதேவன் தனது நண்பர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு வனத்துறை முந்திரிக் காடுகளை ஏலம் எடுத்துள்ளார். இதனால் ஊர் முக்கியஸ்தர்கள் சிலர் அனைவரையும் கலந்து பேசி ஏலம் எடுக்காமல் சகாதேவன் மட்டும் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஏலம் எடுத்தது முக்கியஸ்தர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே அந்த ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், சாமி ஊர்வலம் வந்துள்ளது.
அப்போது காசிநாதன் வீட்டிற்கு சாமி வரும்போது, அங்கு நிறுத்தி தீபாராதனை காட்டாமல் சாமி காசிநாதர் வீட்டை கடந்து சென்றுள்ளது. இதை பார்த்த காசிநாதன் ஏன் எங்கள் குடும்பத்தை ஒதுக்கிவிட்டு சாமி ஊர்வலம் கடந்து செல்ல வேண்டும் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் காசிநாதன் தரப்புக்கும் கமலக்கண்ணன் தரப்புக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் காசிநாதன் மீது அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த மோதலில் சுமார் ஐந்து பேர் காயமடைந்து அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருக்கும் காசிநாதன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த கமலக்கண்ணன், தேவேந்திரன், சுப்பிரமணியன், ராஜேந்திரன் உட்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் கமலக்கண்ணன், கலைவாணன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் காசிநாதன், சகாதேவன், சரசு ஜெயசீலன், விஜயா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருதரப்பு புகாரின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஊர் மக்களின் ஒரு பகுதியினர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காசிநாதன் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் தான் திருவிழாவில் வேண்டும் என்று தகராறு செய்து கலவரத்தை ஏற்படுத்தினார்கள் என்று வாக்குவாதம் செய்தனர். டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ஆமணக்கந்தோண்டி கிராம மக்களிடம் எச்சரித்தனர். “சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறை சும்மா இருக்காது; தன் கடமையை செய்யும்” என்று கூறிய காவல்துறையினர் இது சம்பந்தமாக ஆமணக்கந்தோண்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் மோதல் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.