திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் அருண்பிரசாத்(36). இவர் பா.ஜ.க திருப்பூர் மாவட்ட ஐடி விங் செயலாளராக இருக்கிறார். இவர் சம்பவம் நடந்த அன்று தனது நண்பருடன் உடுமலை மீனாட்சி நகர் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, உடுமலை ஒன்றியக் குழு 4வது வார்டு கவுன்சிலரான பா.ஜ.க.வைச் சேர்ந்த நாகமாணிக்கம் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த இரும்பு பைப்பால் அருண்பிரசாத்தை சரமாரியாகத் தாக்கினர்.
அவர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த அருண்பிரசாத் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று அருண்பிரசாத்திடம் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில், ‘திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களைக் கடத்தும் லாரி உரிமையாளர்கள் மூலம் பா.ஜ.க.வினருக்கு கொடுக்கப்பட்ட ரூ.15 ஆயிரம் மாமூலைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாகத் தான் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது’ என்று தெரியவந்தது.
இது தொடர்பாக அருண்பிரசாத் உடுமலை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் நாகமாணிக்கம் மற்றும் அவரது தரப்பினர் மீது தகாத வார்த்தைப் பேசி ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, நாகமாணிக்கம் அண்ணன் மனைவி செல்வநாயகி(64) காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அதில், ‘அருண்பிரசாத் மற்றும் அவரது தரப்பினர், நாகமாணிக்கம் வீட்டில் அவர் இல்லாத போது வீட்டின் கண்ணாடியை உடைத்து, பொருள்களை சூறையாடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக’ கூறினார். அதனைத் தொடர்ந்து நாகமாணிக்கம் தரப்பினர், அருண்பிரசாத் மீது நடவடிக்கை எடுக்குமாறு உடுமலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், அருண்பிரசாத் தரப்பினர் மீது தகாத வார்த்தையால் பேசுதல், வீட்டைச் சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.