Skip to main content

அதானி, அம்பானிக்காக செங்கல் சூலைகளை தடை செய்ய துடிக்கும் மோடி அரசு... - சி.ஐ.டி.யு கண்டனம்

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

செங்கல் சூலைகளுக்குத் தடை விதித்துவிட்டு, அதற்குப் பதிலாக அதானி மற்றும் அம்பானி ஆகியோரின் நிறுவனங்கள் தயாரித்திடும் நிலக்கரிச் சாம்பல் கற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மத்திய அரசின்  நடவடிக்கைக்கு சி.ஐ.டி.யு. மத்திய பொதுச் செயலாளர் தபன்சென் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

bricks

 

இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றின் அமைச்சகத்தின் செயலாளர் சந்திர கிஷோர் மிஷ்ராவிற்கு தபன் சென் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 17ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், செங்கல் சூலைகளைத் தடை செய்துவிட்டு, அதற்குப் பதிலாக அதானி மற்றும் அம்பானி ஆகியோரின் நிறுவனங்கள் உற்பத்தி செய்திடும் நிலக்கரிச் சாம்பல் மூலம் உருவாக்கப்படும் கற்களைத்தான் வீடுகள், கட்டிடங்கள் கட்ட பயன்படுத்துவது தொடர்பாக மக்கள் கருத்தைக் கோருவதாகக் கூறி ஒரு சுற்றறிக்கை தங்கள் துறை மூலம் வெளிவந்திருப்பதற்கு கடும் ஆட்சேபணையைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டபின்பு இத்தகையதோர் அறிவிக்கையை வெளியிடுவதற்கு இந்த அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் கிடையாது என்பதையும் இதனை புதிதாக பொறுப்பேற்கும் அரசாங்கம்தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கடிதத்தின் நகலை தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பியிருக்கிறேன். இது தொடர்பாக தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.


தேர்தல் நடத்தை விதி மீறல்கள் அமலுக்கு வந்தபின், அதனை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, செங்கல் சூலைகளைத் தடை செய்துவிட்டு, அதானி மற்றும் அம்பானி ஆகியோருக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்கள் தயாரித்திடும் நிலக்கரி மற்றும் பழுப்புநிலக்கரி அடிப்படையிலான சாம்பல் கற்களையே பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசாங்கம் இந்த அறிவிக்கையை வெளியிட்டிருப்பதாக நான் சந்தேகிக்கிறேன்.
 

அரசின் இந்நடவடிக்கை மூலமாக செங்கல் சூலைகளில் வேலைபார்த்திடும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள். இது நம் பொருளாதாரத்திலும் கடும் பாதிப்பினை ஏற்படுத்திடும். செங்கல் சூலைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் இந்த மோசமான நடவடிக்கையை இது தொடர்பாக இதற்கு முன் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டும், நாடாளுமன்றத்தில் சட்டமுடிவு எதுவும் கொண்டுவராமல்,  நிர்வாக ஆணை மூலமாகவே இதனைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சித்து வருவதற்கும் கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்கும் அங்குள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கும் உண்டு. எனினும் இதுதொடர்பாக அவர்களிடம் எவ்விதமான ஆலோசனைகளையும் கேட்காமலும், அவர்களின் கவனத்திற்கே கொண்டுவராமலும் இதனை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. எனவே இந்த அறிவிப்பை எவ்விதத்திலும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று சி.ஐ.டி.யு, பொதுச் செயலாளர் தபன்சென் அக்கடிதத்தில் கோரியுள்ளார் மேலும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஏ.ஐ.டி.யு.சி உட்பட நாடு முழுக்க உள்ள தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்