"சாலையெல்லாம் வெறிச்சோடி இருக்கின்றது.! மனித நடமாட்டமே இல்லை. சாப்பாடே கிடைக்கவில்லை. மரண பயம் அங்கு. அதனால் தான் இந்தியா திரும்பிவிட்டோம்." என்கின்றனர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவிலிருந்து இந்தியா திரும்பியவர்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே புலியூர், வெள்ளையபுரம், பழங்குளம் மற்றும் வில்லாரேந்தல் போன்ற கிராமத்திலுள்ள பல்வேறு நபர்கள் சீனாவிற்கு சென்று அங்கு பணிபுரிந்தும், அங்கிருந்து பொருட்களை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்வதையும் வழக்கமாக கொண்டவர்கள். இதில், புலியூர் கிராமத்தினை சேர்ந்தவர்கள் ராஜாராம், முருகானந்தம், தியாகு மற்றும் அழகுதிருநாவுக்கரசு. இவர்கள் அனைவரும் கடந்த பல வருடங்களாக சீனாவில் கூலிக்குப் பணியாற்றி வருகின்றார்கள். சமீபத்தில் கொரோனா வைரஸ் சீனாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய நிலையில், தங்களுக்கும் அந்த பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் சொந்த ஊர் திரும்பியுள்ளனர் புலியூரை சேர்ந்த ராஜாராம், முருகானந்தம், தியாகு மற்றும் அழகுதிருநாவுக்கரசு ஆகியோர். இவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கின்றதா..? எனும் ஆரம்பக்கட்ட பரிசோதனை செய்து முடிந்த நிலையில், "நாங்கள் இருந்த ஷாங்காயில் அவ்வளவாக வைரஸ் தாக்குதல் இல்லை.
எனினும் அங்கு தெருக்களில் மனித நடமாட்டமே இல்லை. வெறிச்சோடிய தெருக்களும், சரியாக உணவு கிடைக்காமையும் எங்களுக்கு மரணபயத்தை உண்டாக்கியது. இதனாலேயே இந்தியா திரும்பியுள்ளோம். எங்களுக்கு எவ்வித நோயும் தாக்கவில்லை என உறுதியாகியுள்ளது." என்கின்றனர் அவர்கள். எனினும், கிராம மக்கள் அவர்களை தற்பொழுது வரை தூரத்தில் வைத்த பார்க்கின்றனர் என்பது தனிக்கதை.