தருமபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோட்டில் விஸ்டம்லேண்ட் மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளின் ஹைக்கூ கவிதை நூல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டன.
பனிரெண்டாம் வகுப்பு மாணவன் சி.கு.கோகுல் சர்வேஸ் எழுதிய ‘விரல் நுனியில் கீதம்’ எனும் ஹைக்கூ கவிதை நூல், பனிரெண்டாம் வகுப்பு மாணவன் ச.வாசுதேவன் எழுதிய ‘குயில் கூறிய ஹைக்கூ’ எனும் ஹைக்கூ கவிதை நூல், பதினோராம் வகுப்பில் படிக்கும் 43 மாணவ, மாணவிகள் எழுதி, ஆசிரியரும் கவிஞருமான சுபி.முருகன் தொகுத்த ‘சிறகு முளைத்த சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் ஆகியவற்றின் வெளியீட்டு விழா கடந்த ஞாயிறு (07.02.2021) காலை பாலக்கோடு விஸ்டம் லேண்ட் பள்ளி அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தலைமையேற்ற எழுத்தாளரும் கவிஞருமான மு.முருகேஷ், மூன்று நூல்களையும் வெளியிட, பள்ளி ஆசிரியர் கிரி மற்றும் மாணவர்களின் பெற்றோர் ப.சண்முகம், சி.குமார், பானுமதி ஆகியோர் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
மூன்று நூல்களையும் வெளியிட்ட கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, “பாடப்புத்தகங்களைத் தாண்டியும் பிற நூல்களைப் படிக்கிற குழந்தைகள் ஒருபோதும் கெட்டுப்போக மாட்டார்கள். பெற்றோர் முதலில் தங்கள் குழந்தைகளை நம்ப வேண்டும். சிறுவயதிலேயே குழந்தைகள் மனதில் புத்தக வாசிப்பு எனும் விதையை ஆழமாக ஊன்றி விட்டால், நிச்சயம் நம் குழந்தைகள் சமூக அக்கறையுள்ள சிறந்தத் தலைமுறையாக வளர்வார்கள்.
மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு குழந்தைகளை நாம் மனநெருக்கடிகளுக்கு உள்ளாக்குகிறோம். குழந்தைகளிடம் இயல்பாகவே வெளிப்படும் பல்வேறு திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை வளர்த்தெடுப்பதும் மிக முக்கியமான பணியாகும். இதனை ஆசிரியர்களும் பெற்றோரும் இணைந்து செய்ய வேண்டும். குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே அவர்களது நூல்களை வெளியிடும் இப்படியான விழாக்கள் தமிழகமெங்குமுள்ள பள்ளிகள்தோறும் பரவ வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த சம்பத்ஜி, அரங்க. முருகேசன், புலவர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் குணசேகரன், கவிஞர் ரவிச்சந்திரன், கவிஞர் கோ.ராஜசேகர் ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர். நிறைவாக, மகிழினி பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் கவிஞர். சுபி.முருகன் நன்றி கூறினார்.