கடந்த சில ஆண்டுகள் வரை, தமிழகத்தில் குழந்தை தொழிலாளா்கள் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டத்தின்கீழ் அவா்களுக்கு கட்டாயக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கரோனா காலத்தில் குழந்தை தொழிலாளா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருச்சியில் உள்ள பல்வேறு கடைகளில் பணியமர்த்தப்பட்டிருந்த குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.
கரோனா ஊரடங்குகளில் அறிவிக்கப்பட்ட சிறிய சிறிய தளா்வுகள் மூலம் அன்றாட பணிகளைச் செய்ய இயல்பு நிலைக்குத் தமிழகம் திரும்பி உள்ள நிலையில், மிகக் குறைந்த சம்பளத்தில் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைப் பணிக்கு அமர்த்தி அவா்களை வேலை வாங்கும் முதலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 5 நாட்களாக திருச்சியில் பல்வேறு இடங்களில் நடைபெறும் அதிரடி சோதனையில் 14 வயதிற்கு உட்பட்ட 5 குழந்தைகளும், 12 வயதிற்கு உட்பட்ட 4 குழந்தைகளும், 10 வயதிற்கு உட்பட்ட 1 குழந்தையும் மீட்கப்பட்டுள்ளனா்.
குழந்தை தொழிலாளா்கள் தடுப்பு பிரிவு மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு என பல்வேறு துறையைச் சோ்ந்த அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். திருச்சியில் உள்ள குளிர்பானக் கடைகள், டீ கடைகள், செருப்புக் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் தொடா் சோதனையில் ஈடுபட்டு, தற்போது இந்த குழந்தைகளை மீட்டுள்ளனா். அதிலும் பெரும்பாலான குழந்தைகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனா்.
மேலும் கையில் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்களைக் காவல்துறையினா் தொடர்ந்து கண்காணித்து, அவா்களைப் பிடித்து விசாரணை நடத்தி குழந்தைகளை மீட்டு, குழந்தைகள் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைத்தும், பெண்களுக்கான பாதுகாப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதுவரை திருச்சி நகர பகுதியில் சுமார் 15 பெண்கள் கையில் குழந்தையுடன் பிடிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 5 நாட்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வரும் ஆள்கடத்தல் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் சிந்துநதி கூறுகையில், “கையில் குழந்தைகள் வைத்திருக்கும் பெண்களைப் பிடிப்பது சவாலாக உள்ளது என்றும், அவா்களைப் பிடிக்கச் சென்றால் கையில் வைத்திருக்கும் குழந்தைகளைப் பொதுமக்கள் முன்னிலையில் கீழே போட்டு பொதுமக்களிடம் பரிதாபத்தை ஏற்படுத்துகின்றனா். இதனால் பொதுமக்களே அவா்களை ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறீா்கள் என்று காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பும் அளவிற்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றனா்.
இருப்பினும் அவா்களைக் கண்காணிக்க மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், நகரின் முக்கியமான பகுதிகளில், குறிப்பாக கோவில்கள், முக்கியமான சிக்னல்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல இடங்களில் காவல்துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல் குழந்தை தொழிலாளா்களை மீட்டெடுக்க தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என்றும், குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்துவோம்” என்றும் கூறினார்.