தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த நான்கு தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் வெள்ளச் சேதங்களிலிருந்து மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் பல இடங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்திற்குச் சென்ற அவர், அங்கு ஆய்வு நடத்தியதோடு அங்கு தயாரிக்கப்படும் உணவின் தரத்தைச் சாப்பிட்டு ஆய்வுசெய்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''மழைக்காலம் முடியும்வரை அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல் மாநகராட்சி சார்பில் அந்தந்த நேரத்திற்கு ஏற்றார் போல் காலை, மதியம், இரவு உணவுகளை அதற்கென்று இருக்கக்கூடிய சமையல் கூடங்களில் சமைத்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.