அண்மையில் ஆசிரியர்களால் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளாவது தொடர்பான புகார்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக அதிகரித்துவரும் நிலையில், அது தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ், மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார். சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்குப் பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை சமூகவலைதளங்களில் கூறிய நிலையில் அவரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் பாலியல் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், பாலியல் புகாரில் பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்த்துறையில் பட்ட மேற்படிப்பு படித்த சில மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.