Published on 30/04/2020 | Edited on 30/04/2020
சிவகாசி மற்றும் திருத்தங்கல்லில் வேன், ஆட்டோ டிரைவர்கள் என 1000 நபர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.
“கரோனோ வைரஸ் தாக்குதலிலிருந்து நாட்டு மக்கள் மீட்கப்பட்டனர் என்ற செய்தி வரும் வரை இது போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து கொண்டே இருப்போம். நாட்டில் கரோனா வைரஸ் மக்களை தாக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்திய ராணுவத்தின் பலம் அதிகமாய் இருந்து ஒரு வல்லரசு நாடாக உள்ளது. கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க சுகாதாரத்துறை மூலம் அரசுகள் எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கை மனிதாபிமான முறையில் உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக தவித்து வரும் தமிழர்களை மீட்க அந்தந்த மாநில முதல்வர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள இந்நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையை கூட்டி அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பார். பள்ளிப் பாட புத்தங்கள் அச்சடிக்கும் பணி தற்போது சிவகாசியில் நடைபெறுகிறது. அது தடையில்லாமல் நடைபெற, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் முதல்வர் பேசுவார். இதுபோக பள்ளிப் புத்தகம் விநியோகம் சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் முடிவு எடுப்பார். மக்களை பாதிக்காத அளவுக்கு என்னென்ன முடிவுகள் எடுக்க முடியுமோ, அந்தப் பணியை தமிழக முதல்வர் செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை முக்கிய தொழில் பட்டாசு, பிரிண்டிங், தீப்பெட்டி, நெசவு, விவசாயம் ஆகிய தொழில்கள்தான். அந்தத் தொழில்களைப் பாதுகாக்க அனைத்து உதவிகளையும் தமிழக முதல்வர் செய்து வருகிறார்.” என்றார்.