ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16ம் தேதி மணிப்பூரில் துவங்கினார். மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் வழியாக இந்த பயணம் நடைபெற்றது, இந்நிலையில் மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று நிறைவு செய்யப்படுகிறது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த நிறைவு விழா கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் இந்த யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சற்று நேரத்திற்கு முன்பு சென்னை விமான நிலையத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று நடைபெறவிருக்கும் இந்த யாத்திரை நிறைவு விழா மற்றும் அதனை ஒட்டிய பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.