2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் ரவி உரையுடன் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் படிக்கும்போது, தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட வரிகளைப் புறக்கணித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் பேச்சுகள் அவைக் குறிப்பில் இடம்பெறக்கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமடைந்த ஆளுநர், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில், பேசிய முதல்வர் ஸ்டாலின், "புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த தீண்டாமை சம்பவம் உண்மையிலேயே வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது. நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது எனத் தகவல் கிடைத்த உடனே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கவும் நான் அறிவுறுத்தியதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அந்த மக்களுக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரூ. 7 லட்சம் செலவில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 70 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாம் எவ்வளவுதான் பொருளாதாரத்திலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் சமூக வளர்ச்சியிலும், ஒற்றுமையிலும் தடைக் கற்களாக அமைந்துவிடுகின்றன. சாதி, மத பேதமின்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவோர் மீது இரும்புக் கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.