Skip to main content

“முதல்வர் ஸ்டாலின் இரவு பகல் பாராது உழைத்து வருகிறார்..” - அமைச்சர் கணேசன்

Published on 31/03/2022 | Edited on 31/03/2022

 

"Chief Minister Stalin has been working day and night ..." - Minister Ganesan

 

அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்படாமல் இருந்த தாலிக்கு தங்கம் மற்றும் அதற்கான நிதியுதவி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பயன்பெறாதவர்களை கணக்கெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. 

 

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டு காத்திருக்கும் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதி உதவி வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருந்தார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் பயனாளிகள் இந்தத் திட்டத்தின்படி காத்திருந்தனர். இவர்களுக்கு தாலிக்கு தங்கம் நிதியுதவி கிடைப்பதற்கு மாவட்ட அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி. கணேசன் ஆகியோர் உயர்மட்ட அதிகாரிகளிடம் திட்ட உதவி கிடைக்குமாறு அறிவுறுத்தினர். 

 

அதனடிப்படையில் மாவட்ட சமூக நல மற்றும் மகளிர் பாதுகாப்புத் துறை அலுவலர் சித்ரா, மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் உள்ள சமூக நல அலுவலர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் புள்ளி விபரங்களை சேகரித்து அதற்கான நிதியை பெற்றுத் தரும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக பயனாளிகளுக்கு கடந்த 25ஆம் தேதி குறிஞ்சிப்பாடி, குமராட்சி பகுதிகளில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கைகளால் வழங்க ஏற்பாடு செய்தார். 


இதேபோன்று மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள மங்களூர், நல்லூர், விருத்தாசலம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நேற்று 30ஆம் தேதி அன்று திட்டக்குடி தனியார் திருமண மண்டபத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சமூக நலத்துறை சார்பில் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்க, சமூக நல அலுவலர் சித்ரா முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சரும் திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.வி. கணேசன் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை வழங்கினார். அதேபோன்று விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை பெறுவதற்கான சான்றுகளையும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் அடமானம் வைத்த 5 பவுன் நகை கடனை அரசு தள்ளுபடி செய்தது அந்த நகைகளையும் விவசாயிகளுக்கு அமைச்சர் வழங்கினார். ஆதரவற்ற ஏழை விதவை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் என 1058 பயனாளிகளுக்கு சுமார் 4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கணேசன் வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களின் மேம்பாட்டுக்காக இரவு பகல் பாராது உழைத்து வருகிறார். மேலும் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அவர்கள் தான் ஒவ்வொரு குடும்பத்தையும் நிர்வகிக்கிறார்கள். குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு செல்கிறார்கள். குடும்பத் தலைவியாக இருப்பவர்கள் உறவினர்களின் குடும்பங்களில் நடக்கும் விசேஷங்களுக்கு சென்று கலந்து கொள்கிறார்கள். இப்படி அதிக பணிச்சுமை பெண்களுக்கு உள்ளது. அதை குறைக்கும் வகையில் அவர்கள் பயணம் செய்யும் அரசு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்து அது நடைமுறையில் உள்ளது. விவசாயிகள் கடன் சுமையில் இருந்து விடுபடுவதற்காக அவர்கள் அடமானம் வைத்த 5 சவரன் நகைக்கான பணத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அடமானம் வைத்த நகைகளை திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று ஆண் பெண் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு தனியார் நிறுவனங்களை வரவழைத்து அவர்கள் மூலம் ஆண் பெண் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான ஆண் பெண் இரு தரப்பினருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்து வருகின்றன. 


செங்கல்பட்டில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். அதில் 8552 பேருக்கு வேலைக்கான பணி உத்தரவு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர், இதேபோன்று மாவட்டம் தோறும் முகாம்களை நடத்தி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி விரைவில் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் முகாம்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்றார். 


நிகழ்ச்சியில் திட்டக்குடி வட்டாட்சியர் கார்த்திக், சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முகசிகாமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்