Published on 15/01/2021 | Edited on 15/01/2021
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் உள்ளிட்ட அணைகள் நிரம்பிவருவதால், அணைக்கு வரும் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மழையினால் பாதிப்படைந்த பகுதிகளை பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட வயல்களில் போர்கால அடிப்படையில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு வேளாண் மற்றும் வருவாய்த்துறைகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்கவும் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.