Skip to main content

“16 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாமே என்ற நிலை இன்றைக்கு வந்துள்ளது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 21/10/2024 | Edited on 21/10/2024
Chief Minister M.K.Stalin says Why not have 16 children has come today

அதிக குழந்தைகளைப் பெறுவதில் குடும்பங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறியபோது, “இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, குடும்பங்கள் அதிக குழந்தைகளைப் பெறுவதை ஊக்குவிப்பதையும், வரும் ஆண்டுகளில், துடிப்பான இளைய மக்களை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஏராளமான கிராமங்களில் உள்ள இளைய தலைமுறையினர் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து முதியவர்களை மட்டுமே விட்டுச் செல்கின்றனர். தென் மாநிலத்தின் கருவுறுதல் விகிதங்கள் வீழ்ச்சியடைந்து 1.6 ஆக குறைந்துள்ளன. இது தேசிய சராசரியான 2.1 ஐ விட மிகவும் குறைவாக உள்ளது. இந்தப் போக்கு தொடர்ந்தால், ஆந்திரப் பிரதேசம் 2047க்குள் கடுமையான முதுமைப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். இது விரும்பத்தக்க எதிர்காலம் அல்ல, நாம் இப்போதே செயல்பட வேண்டும்” என்று கூறினார். 

சந்திரபாபு நாயுடு இந்த கருத்தை முன்வைத்திருந்த சூழலில், இன்று (21-10-24) காலை சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அதன் பிறகு அவர் பேசியதாவது, “முன்பெல்லாம், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வார்கள். 16 என்றால் 16 குழந்தைகள் அல்ல, 16 செல்வங்கள். 16 செல்வங்கள் என்னவென்று கேட்டால் மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், நிலம், வயது, வாகனம், பொன், பொருள், புகழ், பெருமை. அந்த 16 செல்வங்களை பெறுவதற்கு தான் அன்றைக்கு வாழ்த்தினார்கள். இன்றைக்கு, அளவோடு பெற்று வளர்வோடு வாழுங்கள் என்று சொல்கிறோம். ஆனால், இன்றைக்கு நாடாளுமன்ற தொகுதிகளெல்லாம் குறைகிறது என்ற நிலை வரும்போது, நாமும் 16 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாமே என்று சொல்லக்கூடிய நிலைமை வந்துள்ளது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்