வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலூரில் பெய்த கனமழையில் மொத்தம் 369 க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்தது.
இந்நிலையில் கடலூரில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வசிக்கும் 18 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வீட்டு மனை பட்டாவும், அங்கு வீடு கட்டுவதற்கான அரசாணையையும் வழங்கினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அதன்பிறகு விவசாயிகள் அதிகம் வாழும் ஆடுர் பகுதிக்குச் சென்ற முதல்வர், அங்கு மழை வெள்ளத்தில் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கினார். கடலூர் வந்த முதல்வரிடம் ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வாதார பிரச்சனை தொடர்பாக மனுகொடுத்தனர்.