Skip to main content

அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

Chief Minister M.K. Stalin's praise

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான நேற்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார்.  அதன்படி தேவி சம்பத் என்ற பெண்மணிக்கு இந்த திட்டத்திற்கான முதல் ஏடிஎம் கார்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

இதையடுத்து இந்த திட்டம் குறித்த காணொளி விழாவில் ஒளிபரப்பப்பட்டது. விழாவில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.

 

இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், நகராட்சி, மாநகராட்சிப் பணியாளர்கள்,  தமிழ்நாடு மின்னணு பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன். களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்