தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் சுற்றப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் நாளை (புதன் கிழமை) தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதனையொட்டி தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார்.
இதில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு மதுரையில் இருந்து தேனி வருகிறார். தேனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்குகிறார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க செல்லும் ஊர்களில் எல்லாம் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி தேனியிலும் அவர் நாளை காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மாலையில் லட்சுமிபுரத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக லட்சுமிபுரத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது ஏராளமான தொண்டர்கள் அமருவதற்காக பொதுக்கூட்ட திடல் தயார் செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகின்றது. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் பிரம்மாண்ட கம்பங்கள் நடப்பட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்த பொதுக்கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 12 தொகுதிகளில் இருந்தும் கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என ஒரு லட்சம் பேரை திரட்ட இருக்கிறார்கள். அதற்கான பணியில் தொகுதி பொறுப்பாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்பட பொறுப்பாளர்களும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.