செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரி அருகே 81 பழங்குடியின குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதில் பழங்குடியினர், நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. மேலும், ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் 252 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இப்பகுதியில் இருக்கும் மக்கள் நீண்ட நாட்களாக தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று போராடிவந்தனர். இந்நிலையில், இன்று அங்குள்ள 81 குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கினார். மேலும், அவர்களுக்கு பழங்குடியினர், நரிக்குறவர் மற்றும் இருளர் ஆகிய சாதி சான்றிதழ்களையும் வழங்கினார். இவர்களுக்கு சுயதொழில் பயிற்சி திட்டம் மற்றும் கடன் உதவியும் வழங்கப்பட்டது. அதேபோல், அந்த மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அங்கன்வாடி மற்றும் வகுப்பறைகள் கட்டித்தருவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் அடிப்படை வசதியான, சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவற்றையும் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்.