திருச்சி கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலத்தை திறந்து வைப்பதற்காகவும் தஞ்சையில் தூர்வாரும் பணிகளை பார்வையிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் கார் மூலம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டையன்பேட்டை, திருவளர்ச்சோலை வழியே கடந்து கிளிக்கூடு என்ற இடத்தை சென்றடைந்தார். அதன்பின் அங்கு 90.96 கோடி மதிப்பீட்டில் 1050 மீட்டர் நீளமுள்ள கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பாலத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார்.
மேலும் அந்த புதிய பாலம் வழியாகவே தஞ்சை பள்ளி அக்ரஹாரம் சென்று வெண்ணாற்றில் நடைபெறும் செப்பனிடும் பணிகளையும், வல்லம் முதலை முத்து வாரி, கொடிங்கால்வாய் வாய்க்கால், போன்றவற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார். அதன்பின் மீண்டும் திருச்சி சுற்றுலா மாளிகைக்கு வந்து ஓய்வெடுத்த அவர் தனி விமானம் மூலம் புறப்பட்டு சேலம் மாவட்டத்திற்கு சென்றார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, உள்ளிட்டவர்களும், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.