
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் விவசாயிகள் விளைவித்த நெல்லினை அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில் ஈரோடு வைராபாளையம், மற்றும் பி.பி. அக்ரஹாரம் ஆகிய இரண்டு இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களைத் திறக்கும் நிகழ்வு இன்று (22ஆம் தேதி) ஈரோடு வைராபாளையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து வைத்தார். தொடர்ந்து தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் ரூ. 46.77 லட்சம் மதிப்பில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 800 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியும் அங்கு நடந்தது. விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை முத்துசாமி வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் மையத்திற்கு கொண்டு வரும் அனைத்து நெல்களையும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2060 வழங்கப்படுகிறது. தனியார் நெல் கொள்முதல் நிலையங்களை காட்டிலும் கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் 60 காசுகள் கூடுதலாக கொடுக்கப்படுகிறது. இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உழவர்களின் நலன் காக்கும் வகையில் வேளாண்துறை சார்பில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பராமரிப்பிற்காக மரம் ஒன்றுக்கு ரூ. 7 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு தரப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து மட்டுமே இங்கு நெல் கொள்முதல் செய்யப்படும் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படாது.
காலிங்கராயன் பாசன பகுதியில் இரண்டு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப மேலும் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யும்போது விவசாயிகளின் நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது.
அரசு நிர்ணயித்துள்ள ஈரப்பதத்தின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும். பொட்டாஸ் உரம் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்கள் இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதி கிடைக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட பகுதியில் யாரும் செல்லாத வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கும். அனுமதி கிடைத்தவுடன் அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதற்காகவும் விரைவில் ஈரோட்டுக்கு வருகை தர உள்ளார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.