தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர் குழு உடனான ஆலோசனையைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், ம.ம.க. சார்பில் ஜவாஹிருல்லா, கொ.ம.தே.க. சார்பில் ஈஸ்வரன், திமுக சார்பில் டாக்டர் எழிலன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஜெகன்மூர்த்தி, சிபிஐ சார்பில் தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாலி, பாமக சார்பில் ஜி.கே. மணி, காங்கிரஸ் சார்பில் முனிரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பல்வேறு துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரை குறித்து சட்டமன்றக் கட்சி உறுப்பினர் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "தமிழகத்தில் கரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்காகவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான ஆக்சிஜன் அளவை 519 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். துபாயிலிருந்து 800, தென் கொரியாவிலிருந்து 975 என ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 30% மூலதன மானியம் வழங்கப்படும். தமிழகத்தில் கரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கரோனா பரவல் விதிகளை சிலர் மதிப்பதில்லை; விடுமுறை என நினைத்து சிலர் ஊர் சுற்றுகின்றனர். காவல்துறையினரின் அன்பான அறிவுரையையும் கேட்காமல் சுற்றுகின்றனர். கரோனாவின் பயம் மக்களின் பேச்சில் தெரிகிறது; ஆனால் அவர்களின் செயலில் இல்லை.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்துவருகிறது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தினால்தான் கரோனாவைக் குறைக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். கரோனாவால் மருத்துவத்துறையினர், மாணவர்கள் ஆகியோர் நெருக்கடிக்கு ஆளாகிவருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முழு ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசு இன்று (22.05.2021) முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது.