டெல்டா மாவட்ட குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்திற்கு இன்று (24/05/2022) காலை வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு உயரதிகாரிகள், அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓமலூர் விமான நிலையத்தில், சேலம் மாநகராட்சி மேயர், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக கார் மூலம் மேட்டூர் அணைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் சால்வை அணிவித்தனர். பின்னர், குறுவைச் சாகுபடிக்காக முதலமைச்சர் அணையைத் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணை திறப்பால் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடியில் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். மேட்டூர் அணை வரலாற்றில் ஜூன் 12- ஆம் தேதிக்கு முன்பே 11- வது முறையாக அணை திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் அடுத்த மூன்று நாட்களில் கல்லணையைச் சென்றடைய வாய்ப்பு உள்ளது.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடிக்கு மேல் உள்ளதால் ஜூன் 12- ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.