டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற நிலையில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றார். அதேபோல் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வென்றார்.
இன்று இந்திய ஆடவர் ஹாக்கி அணி, மேலும் ஒரு வெண்கலத்தை வென்றுள்ளது. இந்நிலையில் 57 கிலோ பிரிவு மல்யுத்த இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியாவும் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் சவூர் உகுவேவும் மோதினர். இதில் ரவிக்குமார் தஹியா தோல்வியடைந்தார். இதனையடுத்து அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை இரண்டு வெள்ளி பதக்கங்களையும், 3 வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்த போட்டியில் வெள்ளி வென்ற ரவிக்குமார் தஹியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ரவிக்குமார் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள் என மு.க.ஸ்டாலின் அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.