தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு நல திட்டங்கள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் 114.19 கோடி மதிப்பில் 75 திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதுபோல் 350.50 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 993 திட்டங்களை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு கோவை சரக டிஐஜி தலைமையில் 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் என பலரும் இந்த நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தர்மபுரி என்ற உடனே எனக்கு நினைவுக்கு வருவது ஒகேனக்கல்லில் 1,928 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். அந்த திட்டத்திற்கு 2008 ஆம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சராக நான் இருந்தபோது ஜப்பானுக்கு சென்று நிதி வசதிகளையும், திட்டமிடுதல்களையும் செய்தேன்.
முதலமைச்சர் கலைஞர் அந்தத் திட்டத்தை அன்று தொடங்கி வைத்தார். ஆனால் ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. உடனே நானே இங்கு நேரில் வந்து போராட்டம் நடத்தினேன். அதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த வகையில் தர்மபுரி மாவட்ட மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியோடு உங்களிடையே நின்று கொண்டிருக்கிறேன்.
ஔவையின் வரலாற்றில் எப்படி தர்மபுரிக்கு பங்கு இருக்கிறதோ அதேபோல தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்தில் தர்மபுரிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. 1989 ஆம் ஆண்டு இதே தர்மபுரியில் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற அமைப்பை முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். அதன்படியே கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கின்ற முகாம் இங்குதான் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களும் மகளிர் வாழ்வில் ஒளிவிளக்காக இருந்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற சட்டத்தை இயற்றியதும் கலைஞர்தான். இது பெண் இனத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வழங்கிய அதிகாரக் கொடை.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு டிவியில் ஒரு பேட்டியை பார்த்தேன். அதில் ஒரு பெண் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் ஸ்டாலின் அண்ணன் எங்களுக்கு கொடுத்த சீர் என்று சொன்னார். அப்பொழுது எனக்கு என்ன தோன்றியது என்றால், நம் திராவிட மாடல் அரசுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழக மகளிர்க்கும் இந்த திட்டத்தால் ஏற்பட்டுள்ள குடும்ப பாசத்தை எண்ணி நெகிழ்ந்து போனேன். மத்திய அரசு மாநிலங்களின் நிதி ஆதாரத்தை பறித்து அழிக்க நினைக்கிறது. பிரதமர் வருவது சுற்றுப்பயணம் அல்ல வெற்றுப் பயணம். தமிழ்நாட்டை சுரண்டியவர்களால் இது போன்ற சாதனை பட்டியலை வெளியிட முடியுமா?'' என்றார்.