கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்காக தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்திற்காக மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் 1.06 கோடி மகளிர் உரிமை தொகையை பெற தகுதி பெற்றுள்ளனர். ரூ.1000 பெற உள்ள குடும்ப தலைவிகளுக்கு என பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதே சமயம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 11 ஆம் தேதி தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவுள்ளதையொட்டி இத்திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுரைகளை வழங்கி இருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். விழாவின் போது மாவட்ட ஆட்சியர், அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கினர். திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினார். தேவி சம்பத் என்ற பெண்மணிக்கு இந்த திட்டத்திற்கான முதல் ஏடிஎம் கார்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் இந்த திட்டம் குறித்த காணொளி விழாவில் ஒளிபரப்பப்பட்டது. விழாவில் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த பெண்கள் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டம் குறித்து உரையாற்றி வருகிறார். முன்னதாக காவல் துறை சார்பில் முதல்வருக்கு அணிவகுப்பு மரியாதையும், தமிழக அரசு மற்றும் திமுக சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.