தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும், மாவட்டம் தோறும் 'மக்கள் குறைகேட்பு முகாம்' நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், காடாம்புலியூர், விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் 'மக்கள் குறைகேட்பு முகாம்' நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். முகாமில் மனைபட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவை குறித்து ஆயிரக்கணக்கான மனுக்களை மக்கள் அளித்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் பேசிய அமைச்சர் கணேசன், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு வருகிறார். எப்பொழுது தூங்குகிறார் எப்போது விழிக்கிறார் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறார்.
மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் முதலமைச்சர் தீவிர அக்கறை காட்டுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் மனுக்களை ஆர்வமுடன், நம்பிக்கையுடன் அளிக்கின்றனர். இந்தக் குறை தீர்ப்பு, குறைகேட்பு முகாம்கள் மூலம் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு மாவட்ட நிர்வாகம் 30 நாட்களில் தீர்வு காண வேண்டும். மனு கொடுத்த மக்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளேன்" என்றார்.
இம்முகாம்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி சபா.ராஜேந்திரன், விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர்கள் ரஞ்சித்சிங், பவன்குமார் ஜி. கிரியப்பனவர் மற்றும் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார், வட்டாட்சியர் விருத்தாச்சலம் செந்தில்குமார், பண்ருட்டி பிரகாஷ், திட்டக்குடி தமிழ்ச்செல்வி உள்பட மாவட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.