![Chief Minister congratulates Dravidar Kazhagam president K Veeramani](http://image.nakkheeran.in/cdn/farfuture/pzdzhpNS5sIlEncrVG3L7C-UNjAXeHM71PyuvLQLAUc/1690878963/sites/default/files/inline-images/kv-mks.jpg)
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021 ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டிற்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணையதளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி. வீரமணிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
"தகைசால் தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர் கி. வீரமணிக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்க உள்ளார். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி "தகைசால் தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.