காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ண கவுண்டர் (வயது 101) கரோனா பாதிப்பால் காலமானார்.
தனது 27 ஆவது வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் காளியண்ண கவுண்டர். திருச்செங்கோட்டைச் சேர்ந்த காளியண்ண கவுண்டர்,எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. பதவிகளை வகித்தவர் ஆவார். மேலும், மகாத்மா காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், ராஜாஜி, காமராஜருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் 200 அரசுப்பள்ளிகளை திறந்து வைத்தப் பெருமையைப் பெற்றவர்.
அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் காளியண்ண கவுண்டர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ''ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அரும்பணியாற்றிய காளியண்ண கவுண்டரின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு. ஜமீன் முறை ஒழிப்புக்கு தனது முழு ஒத்துழைப்பளித்த மாபெரும் சீர்திருத்தவாதி காளியண்ண கவுண்டர்'' என அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.