நிர்மலா தேவி விவகாரத்தில் ஓய்வு பெற்ற சந்தானம் குழு அறிக்கையை தாக்கல் செய்தாலும் நீதிமன்ற உத்தரவு வரும் வரை அறிக்கையை வெளியிட கூடாது என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
நிர்மலாதேவி விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். இந்த குழு தனது விசாரணை அறிக்கையை 12-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விசாரணை அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் கணேசன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கை வெளியிட இன்று தடை விதித்தது. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும் அதனை வெளியிட பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தருக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.