கடலூர் மாவட்டம், ரெட்டி சாவடி குமாரமங்கலத்தில், 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட விளைநிலத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புயலால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் இழப்பீடுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். நிவர் புயலின் பாதிப்பைத் தடுக்க அரசு கொடுத்த அறிவுறுத்தலின்படி, செயல்பட்ட ஊழியர்கள், அதிகாரிகளைப் பாராட்டுகிறேன். அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கரும்பு, வாழைப் பயிர்கள் அதிகம் சேதமடைந்துள்ளது, அதற்கான நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
மின்சாரம் நிறுத்தப்பட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், மின்சாரத்தை நிறுத்தவில்லை என்றால் எதாவது ஒரு இடத்தில் மரம் சாய்ந்து உயிர்ச் சேதம் ஏற்பட்டுவிடுமோ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் அடிப்படையில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. எல்லா இடத்திலும் அல்ல, எங்கெல்லாம் புயலால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்த பிறகுதான் மின்சாரத்தைக் கொடுக்கமுடியும். இல்லையென்றால் எந்த இடத்தில் மின்கம்பம் விழுந்தது என யாருக்குத் தெரியும். எனவே நகர்ப் பகுதியாக இருந்தாலும் சரி, கிராமப் பகுதியாக இருந்தாலும் சரி மின்கம்பங்கள் சாயவில்லை, கம்பிகள் அறுந்துவிழவில்லை என ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பிறகு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதெல்லாம் மக்களின் நலனுக்காகதான் என்றார்.
1,000 மின்பணியாளர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில், காலையே இயல்பு நிலை திரும்பியும் இதுவரை சீரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை என்ற கேள்விக்கு, ''ஆமாம் ஒன்று ஒன்றாகத் தானே பார்க்கமுடியும். என்ன ஸ்விட்ச் ரிமோட் கண்ட்ரோலா பட்டனைத் தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு. ஒரு கம்பத்தை எடுத்து நிறுத்திப் பாருங்க... உழைச்சாத்தான் அதன் உழைப்பு தெரியும்'' என ஆவேசமானார்.