ஆட்சியாளர்களுக்கு உதவ அரசியலமைப்புச் சட்டத்தைப் பலி கொடுப்பதா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கை: ’’மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசுக்கு உதவும் விதமாகத் தொடர்ந்து காவிரி பிரச்சனையில் கால அவகாசம் வழங்கி வரும் உச்சநீதிமன்றத்தின் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உச்சநீதிமன்றத்தின் பணி அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவதா ? அல்லது ஆட்சியில் இருப்பவர்களுக்கு அரசியல்ரீதியாக உதவி செய்வதா ? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வரும் மோடி அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கடந்தமுறை வழக்கு விசாரணைக்கு வந்த போது “ கர்நாடகா உடனடியாக 4 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வாய்மொழியாக உத்தரவிட்டார். ஆனால், அதே நீதிபதி தண்ணீர் திறந்துவிடும் பிரச்சனையை எல்லாம் இப்போதைக்கு நீதிமன்றம் கவனிக்க முடியாது என இன்று கைவிரித்துள்ளர். இது தமிழ்நாட்டு மக்களை வலிய அழைத்து அவமதித்தது போல் உள்ளது.
காவிரி பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடாமல் நீதிமன்றம் எதைச் சொன்னாலும் அதைக் கேட்டுக்கொண்டு திரும்பி வருவது என்ற விதத்தில் தமிழகஅரசு செயல்பட்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது. காவிரியில் இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு மோடி அரசும் தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அரசும் தான் காரணம் என்று குற்றம்சாட்டுகிறோம்.
உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு நடந்த போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ‘செயல்திட்டத்தை உருவாக்கினாலும் உங்களுக்கு தண்ணீர் கிடைக்கப்போவதில்லை’ என்று தமிழ்நாட்டைப் பார்த்துக் கூறியிருக்கிறார். தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதில்லை என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது என்பது மட்டுமின்றி, அது அமைக்கப்போகும் செயல்திட்டமும் எந்த வித அதிகாரமும் இல்லாத அமைப்பாகவே இருக்கும் என்பது இதன்மூலம் தெரியவருகிறது.
உச்சநீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிகையைத் தமிழக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர். எனவே, மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமே அடைத்துக்கிடக்கும் மோடி அரசின் காதுகளையும் உச்சநீதிமன்றத்தின் மனசாட்சியையும் திறக்க முடியும். அதற்கு தயாராவோம். ’’