திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 2668 அடி உயரம்முள்ள மலை உச்சியில் மகாதீபம் டிசம்பர் 10ந் தேதி மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. லட்ச கணக்கான பக்தர்கள் இதனை நகரில் இருந்தபடி கண்டனர், அதன்பின்பும் கிரிவலம் வந்தனர். விடியற்காலை 3 மணிவரை நகரத்திலும், கிரிவலப்பாதையிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் கூட்டம் வந்தபடியே இருப்பதால் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று புகழ்பெற்ற மாட்டு சந்தை, நான்காவது நாளாக இன்றும் செங்கம் சாலையில் உள்ள சந்தை மைனாத்தில் நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 12ந் தேதியான இன்றும் பக்தர்கள் கிரிவலம் வந்தபடி உள்ளனர். டிசம்பர் 12ந் தேதி பௌர்ணமி என்பதால், இன்று இரவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 5 லட்சம் பக்தர்களை எதிர்பார்க்கிறது மாவட்ட நிர்வாகம். இதனால் போலீஸ் பாதுகாப்பும் முழுதாக திரும்ப பெறாமல் வைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10ந் தேதி மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம், டிசம்பர் 21ந்தேதி வரை மலை உச்சியில் எரியும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த 11 நாட்களும் கோயிலுக்கு வெளிமாநில, வெளிமாவட்ட பக்தர்களின் வருகை இருந்தபடியே இருக்கும் என முடிவு செய்து தகுந்தார்போல் கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகமும் வாகனம் நிறுத்த, தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் செய்ய சில முன்னேற்பாடுகளை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.