கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகளுக்கு காணிக்கை இனங்கள் வந்துள்ளது. இந்த காணிக்கை இனங்கள் அனைத்தும், கடந்த 2005- ஆம் ஆண்டிற்கு முன்பு கடைசியாக ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன் பிறகு கோயிலுக்கு, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சென்று புதிய காணிக்கை இனங்களை ஆய்வு செய்யவில்லை.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரிகள் குழுவினர், கடந்த மாதம் ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கணிக்கை இனங்களை சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து நான்கு கட்டமாக ஆய்வுப் பணி நடந்தது. இந்த பணி நேற்றுடன் நிறைவடைந்தது.
கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர், இந்த ஆய்வில் ஈடுபட்டனர். இதில் 2005- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 28/09/2022 வரை காணிக்கையாக வரப்பெற்ற நகைகள், நகை மதிப்பீட்டு சிறப்புக் குழுவினரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பணி 19 நாட்கள் நடந்தது. மேலும் 1955- ஆம் ஆண்டு முதல் 2005 மார்ச் மாதம் வரை மதிப்பீடு செய்யப்பட்ட இனங்களை மறுமதிப்பீடு செய்யும் பொருட்டு காணிக்கை இனங்களை காண்பிக்குமாறு கோயில் பொது தீட்சிதர்களிடம் இக்குழுவினர் தெரிவித்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.