பொதுமக்களின் போக்குவரத்துக்காக சென்னையில் மின்சார ரயிலுக்கு அடுத்தப்படியாக மாநகர போக்குவரத்து கழகத்தின் சேவை பெரும் பங்காக உள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30-ந்தேதி வங்கி கணக்கு வழியாக சம்பளம் வழங்கப்படும்.
ஜூன் மாதம் சம்பளம் நேற்று (30-ந் தேதி) வழங்கி இருக்க வேண்டும். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வங்கிகள் மூலம் சம்பளம் செலுத்த முடியவில்லை. மாதத்தின் இறுதி நாள் விடுமுறை தினமாக அமைந்து விடும் நிலையில் அதற்கு முதல் நாள் ஊதியம் வழங்கப்பட வேண்டும். இது தான் வழக்கமான நடைமுறையாகும்.
வழக்கம் போல் சனிக்கிழமை வங்கி கணக்கில் சம்பளம் வரும் என்று எதிர்பார்த்தனர். அன்று வராததால் ஞாயிற்றுக்கிழமை வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் சம்பளம் போடப்படவில்லை. இதனால் சென்னை மாநகர பஸ் தொழிலாளர்கள் இன்று காலையில் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 6 பணிமனைகளில் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை வெளியே எடுக்காமல் பணிமனை முன்பு கூடி திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பஸ் போக்குவரத்து இல்லாததால் பிராட்வே, கோயம்பேடு, வடபழனி, கே.கே.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் பயணிகள் அவதிப்பட்டனர். சம்பளத்தை உடனே வழங்கக்கோரி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தகவல் அறிந்து அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பஸ் ஊழியர்களின் திடீர் ஸ்டிரைக் காரணமாக காலையில் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லக்கூடியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மாநகர பஸ்கள் அதிகளவு செல்வது வழக்கம். இன்று காலையில் குறைந்த அளவில் வந்து சென்றன. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் படிப்படியாக பஸ் போக்குவரத்து தொடங்கியது.
போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தம் குறித்து சிஐடியு பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் நக்கீரன் இணையதத்திடம் கூறுகையில்,
வழக்கமாக மாதத்தின் கடைசி நாள் வங்கிக் கணக்கில் சம்பளம் போடுவார்கள். அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் விடுமுறை என்பதால் சனிக்கிழமை (29.06.2019) சம்பளம் போட்டியிருக்க வேண்டும். திங்கள்கிழமை (01.07.2019) காலை வரை சம்பளம் போடாத காரணத்தினால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இன்று கண்டிப்பாக சம்பளம் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவோம் என்றனர். அதுவும் 62 சதவீத சம்பளம் என்றனர். நாங்கள் முழுசம்பளத்தையும் வங்கிக் கணக்கில் போடுவமாறு கூறினோம். பின்னர் மாலைக்குள் சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்திவிடுவோம் என்றனர். வேலைநிறுத்தைம் என்பதற்காக யார் மீதும் எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்க்கூடாது என்றோம். பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என்று வாக்குறுதி அளித்தன் அடிப்படையில் வேலைநிறுத்தம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது என்றார்.
டிரைவர், கண்டக்டர்கள் சிலர் கூறும்போது, தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மட்டும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட நாளில் சம்பளம் வழங்கப்படவில்லை. மற்ற 7 போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு விட்டது என்றனர்.