சிதம்பரம் நகரில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டுவரும் திட்டம் மக்களின் வரி பணத்தில் 7.18 கோடி ரூபாய் செலவில் போடப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் பாழடைந்து உபயோகம் இல்லாமல் சீர்கெடுகிறது. சிதம்பரம் நகரின் நிலத்தடியில் தண்ணீர் எடுக்க கூடாது என்று கொள்ளிடம் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதை புனரமைக்காமல் தற்போது சிதம்பரம் நகரின் நிலத்தடியில் சுமார் 800 அடி ஆழத்தில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் உறிஞ்சுகிறார்கள்.
கோடை காலம் நெருங்குவதால் வக்காரமாரி சிதம்பரம் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரியான வக்கராமாரி ஏரி நீர் வற்றி வருகிறது. மேட்டூரில் இருந்து திறக்கப்படும் அனைத்து தண்ணீரையும் கடலுக்குள் விட்டு விட்டு கீழே நிலத்தடியில் கடல் நீரே உள்ளே உறிஞ்சப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் 500 அடியில் தண்ணீர் உறிஞ்சுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது 800 அடியில் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் 1000 அடிக்கு கீழ் உறிஞ்சப்படும் நிலை ஏற்படும். மேலும் இதே நிலை நான்கு, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்தால் சிதம்பரம் பகுதி முழுவதுமே உப்பு நீர் மட்டும்தான் நிலத்தடியில் கிடைக்கும்.
எனவே கொள்ளிடம் ஆற்றில், ஏற்கனவே போடப்பட்ட நீர் உறிஞ்சும் கிணறுகளை புனரமைத்து பயன்படுத்த வேண்டுமென்றும், சிதம்பரம் நகர நீர்த் தேவைக்கு சிதம்பரம் நகரின் நிலத்தடி மட்டத்தில் நீர் உறிஞ்சுவதை நகராட்சி நிறுத்த வேண்டும் என்றும் சிதம்பரம் வர்த்தக சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர். சிதம்பரத்திற்கு கவர்னர் வருகையின்போது அவரது கவனத்தை ஈர்த்தனர். மேலும் இதே நிலை நீடித்தால் பல்வேறு தரப்பு மக்கள் இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடவும் முடிவுசெய்துள்ளனர்.