கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே காட்டுமன்னார்குடி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுபூலாமேடு என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆதிதிராவிட சமூகத்தின் வள்ளுவர் பிரிவை சேர்ந்த 30 குடும்பங்கள் ஒரே தெருவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதிக்கு அரசு சார்பில் சாலைவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் பயன்படுத்தி வந்த சாலை பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியருக்கு சொந்தம் எனக்கூறி இதில் யாரும் நடக்கக்கூடாது என மூங்கில் வேலி அமைத்து தெருவின் பாதைய அடைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வேலியை எடுப்பதற்கு பயந்துகொண்டு வேலியை சிறிது விலக்கிவிட்டு சென்று வருகிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் வேலியில் உள்ள முட்கள் குத்தியவாறு வேலியை கடந்து சென்று வருகிறார்கள். மேலும் இந்த வேலியால் பெரும் அவதியை அனுபவிக்கின்றனர்.
இதுகுறித்து சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜனிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடந்த இரு நாட்களுக்கு முன் மனுகொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் ரசீது மட்டும் கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தபகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
சார் ஆட்சியரிடம் சம்பவம் குறித்து கேட்டபோது அப்படியா எனக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறி, மறுபடியும் அனைத்து விபரத்தையும் கேட்டுக்கொண்டு அதுகுறித்து படங்கள் இருந்தால் அனுப்பிவையுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். அதனை தொடர்ந்து அவரிடம் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கொடுத்த மனுவின் நகல், தெருவை முள்வேலியை கொண்டு அடைத்துள்ள படத்தை அனுப்பிவைத்துள்ளோம்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் பட்டியல் இனமக்கள் வசிக்கும் பொதுப்பாதையை அடைப்பது என்பது கொடிய தீண்டாமையின் வடிவம். இந்த பகுதியில் உள்ள மக்கள் அந்தப் பாதையை சுதந்திரமாக பயன்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தபட்ட அரசு அதிகாரிகள் போர்கால அடிப்படையில் எடுக்கவேண்டும். அங்கு வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். சம்பந்தபட்டவர்கள் மீது சம்பவத்தின் உண்மை தன்மையை அறிந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.