சிதம்பரம் தாலுகாவில் உள்ள பாசி முத்தான் ஓடையில் வடக்கு தில்லைநயகபுரம் அருகிலிருந்த குருமாதிட்டு ஷட்டர் உடைந்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆகிறது. இதனால் மீதிகுடி வாய்க்கால் மற்றும் குருமாந்திட்டு வாய்க்காலுக்குப் பாய வேண்டிய நீர் விவசாயத்திற்குப் பயன்படாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதனால் இதனைச் சுற்றியுள்ள சுமார் 1,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகி மானாவாரி நிலமாகிவிட்டது.
மீதிகுடி வாய்க்காலால் பயன்பெறும் கிராமங்கள் வடக்கு தில்லைநயகபுரம், பள்ளிப்படை, காரப்பாடி, கோவிலாம்பூண்டி, சி. கொத்தங்குடி, மீதிகுடி, சிதம்பரநாதன் பேட்டை, நவாப் பேட்டை, குண்டுமேடு ஆகிய கிராமத்தில் உள்ள விளை நிலங்கள் தரிசாகப் போய்ப் பாழ்பட்டுள்ளது.
இந்த ஷட்டர் சரி செய்யும் பட்சத்தில் சுமார் 12,000 விவசாயக் குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். மேற்குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள கால்நடைகள் ஆற்று நீர் இல்லாத காரணத்தினால் குடிக்க நீரின்றி உயிரிழக்க நேரிடுகின்றது.
இதனை உடனடியாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.