கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 38-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்குவீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
விழாவை தொடக்கி வைத்து பேசிய என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமார், நாட்டிய கலையின் தூணாக சிதம்பரம் நாட்டிய அரங்கேற்றம் நடைபெறும் இடமாக திகழ்கிறது. இந்த விழாவில் இந்தோனேஷியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று சிவனுக்கு நாட்டியாஞ்சலி செலுத்துகின்றனர். நடனம் ஒழுக்கமான வாழ்க்கையை தருகிறது என்றார்.
முன்னதாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் ஆர்.முத்துக்குமரன் வரவேற்றார். வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன் அறிமுக உரையாற்றினார். செயலர் ஏ.சம்பந்தம் நன்றி கூறி பேசுகையில், மகா சிவராத்திரி வரை 5 நாள்கள் நடைபெறும். இந்த விழாவில் 46 நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் 360-க்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். நாட்டியக் கலைஞர்களிடம் பணம் பெறாமல் நாட்டியாஞ்சலி விழா திகழ்கிறது என்றார்.
விழாவில் என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் ராகேஷ்குமாரின் துணைவியார் காஞ்சன் கம்ரா, அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ்.ஆர்.ராமநாதன், சக்தி ஆர்.நடராஜன், அணி வணிகர் பா.பழநி, ஆர்.சபாநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டியஞ்சலி தொடக்கநாளில் பெங்களூரு ஸ்கந்த நாட்டியாலயா, யுஎஸ்ஏ சித்தேந்திரா குச்சுப்புடி கலை மையம் மாணவ, மாணவிகளின் குச்சுப்புடி நடனம், மலேசியா நிருத்ய கலாஞ்சலி நாட்டிய மைய மாணவ, மாணவிகள், பெங்களூரு நூபூர் கலை மைய மாணவ, மாணவிகளின் கதக் நடனம், பெங்களூரு நிருத்ய பிரகாஷ வர்ஷினி மாணவ, மாணவிகளின் நாட்டிய நாடகம், இந்தோனேஷியா சிந்து நாட்டியப் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.