கடந்தாண்டு கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கேரளாவில் அந்த உணவு தடைசெய்யப்பட்டது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கன் ஷவர்மா விற்கப்படும் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வந்தனர். சில கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பிறகே ஷவர்மா பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் உணவகம் ஒன்றில் சிக்கன் ஷவர்மாவை தெரு நாய் ஒன்று சாப்பிட்ட நிலையில், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஜார்ஜ் சாலையில் சமுத்ரா குடும்ப உணவகம் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலுக்கு வெளியில் சிக்கன் ஷவர்மா செய்வதற்கான மெஷின் வைக்கப்பட்டுள்ளது. அந்த மெஷினில் உள்ள சிக்கனை அந்த வழியாகச் சென்ற தெரு நாய் ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தொடர்ந்து உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் சம்பந்தப்பட்ட கடையானது உணவுகளை டெலிவரி செய்து வந்தது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட கடைக்கு வந்த உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதை அறிந்து அவற்றை பறிமுதல் செய்ததோடு கடைக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.