சிக்கன்ரைஸில் ரைஸ் மட்டும்தான் இருக்கிறது; சிக்கன் எங்கே இருக்கிறது? என்று கேள்வி கேட்ட இளைஞரை அடித்து துவைத்த உணவக ஊழியர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பேருந்து நிலையங்களை ஒட்டியுள்ள உணவகங்களில் விற்கப்படும் உணவுப்பண்டங்களின் தரம் எப்போதும் கேள்விக்குறியானவை என்பது தெரிந்தாலும்கூட, அவசரகதியில் வரும் வெளியூர் பயணிகள் வேறு வழியில்லாமல் அங்குள்ள கடைகளில் சாப்பிட நேர்கிறது. குஸ்காவுககு ஆனியன் கேட்டால்கூட ஆனை விலை பில் போடுவதும் உண்டு.
பிரியாணி முதல் சைனீஸ் உணவுப்பதார்த்தங்கள் வரை சகட்டுமேனிக்கு அஜினோமோட்டோ, செயற்கை நிறமூட்டிகள் சேர்த்தும் விற்பனை செய்கின்றனர். இதையெல்லாம் உள்ளூர் காவல்துறையும், உணவுப்பாதுகாப்புத்துறையும் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இந்நிலையில், சேலத்தில் சிக்கன் ரைஸ் சப்ளை செய்த உணவக ஊழியரிடம், ரைஸ் இங்கே இருக்கிறது; சிக்கன் எங்கே இருக்கிறது? என்று கேட்ட நுகர்வோரை சரமாரியாக தாக்கிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகின்றன. இதில் பேருந்துகள் வெளியேறும் பகுதியில் வரிசையாக இருக்கும் உணவகங்களில், வாடிக்கையாளர்களை தங்கள் கடைகளுக்கு இழுப்பதற்காகவே, ஊழியர்கள் வெளியே நின்று, 'வாங்க சார் வாங்க சார்... டிபன் ரெடி... எல்லாம் சூடாக இருக்கு வாங்க சார்...' என்று கூவுகின்றனர். இப்படி கூவுவதிலும் கடைக்காரர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த கூவலுக்கு செவி சாய்த்த சேலம் ஓமலூர் தண்ணீர்த்தொட்டி பகுதியைச் சேர்ந்த குமார் (30), குறிப்பிட்ட ஒரு உணவகத்திற்குச் சென்றுள்ளார். அங்கே, சிக்கன் ரைஸ் கேட்டு ஆர்டர் கொடுத்துள்ளார். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவருக்கு சூடாக சிக்கன் ரைஸ் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள் ஊழியர்கள். குமாரோ, சிக்கன் ரைஸில் சிக்கன் துண்டுகளை தேடித்தேடி பார்த்திருக்கிறார்.
சிக்கன் ரைஸூக்குள் விரல்களால் நடந்த தேடுதல் வேட்டையில் ஒன்று இரண்டு எலும்புத்துண்டுகள் மட்டும் தட்டுப்பட்டதே தவிர, கோழிக்கறி துண்டுகளை காணாததால், அவர் கடும் ஏமாற்றம் அடைந்தார். அதன் விலையும் 90 ரூபாய் என்பதும் அவருக்கு உறுத்தலாக இருக்கவே, ரைஸ் மட்டும்தான் இருக்கிறது; சிக்கன் எங்கே இருக்கிறது? எனக்கேட்டதால், உணவக ஊழியர்கள் அவரிடம் மல்லுக்கு நின்றுள்ளனர். ஒருகட்டத்தில் குமாரை அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி காவல்நிலைய எஸ்எஸ்ஐ சரவணன் மற்றும் காவலர்கள் அங்கே வந்து, குமாரை மீட்டுள்ளனர். பின்னர் இருதரப்பையும் அழைத்து சமரசரம் பேசி வைத்தனர். ஆனால் சிக்கன் துண்டுகள் இல்லாமல் ஏமாந்து போனதோடு, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுக்க, அதையும் காவல்துறையினர் வாங்க மறுத்து, சமாதானமாகப் போகும்படி, உணவகத்திற்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, வாடிக்கையாளரை உணவக ஊழியர்கள் தாக்கிய சம்பவம் குறித்த காணொலி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளப்பட்டி காவல்துறையினர் வேறு வழியின்றி சம்பந்தப்பட்ட உணவக ஊழியர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்தனர். அதையடுத்து, குமாரை தாக்கியதாக சங்கீதப்பட்டியைச் சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் (24), சங்கர் (34), விருதுநகரைச் சேர்ந்த சுப்புராஜ் (34) ஆகிய மூவரையும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) கைது செய்துள்ளனர்.