மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்குகின்றன. தற்பொழுது ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். நிகழ்வில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக ஆளுநர், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தற்பொழுது விழாவானது நாட்டுப் பண் உடன் தொடங்கியது.
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், 'மத்திய அரசின் ஒத்துழைப்புடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் முயற்சியால் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தமிழகத்தில் நடத்த முடிந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன். 2000 பங்கேற்பாளர்களையும், ரசிகர்களையும் வரவேற்கிறேன்'' என்றார்.