Skip to main content

சென்னையில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Chess Championship in Chennai
கோப்புப்படம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் டிசம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட் - ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடுவார்கள் எனவும், இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 50 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ளது எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்களான டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி போன்ற வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பாக அமையும். மேலும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்கள் பர்ஹாம் மக்சூட்லூ, பி. ஹரிகிருஷ்ணா, லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், அலெக்சாண்டர் ப்ரெட்கே மற்றும் ஸ்ஜுகிரோவ் சனான் போன்ற வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. தற்போது இந்தியாவில் உள்ள கிராண்ட்மாஸ்டர்களில் மூன்றில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, பிரக்ஞானந்தா. டி. குகேஷ் மற்றும் சமீபத்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி போன்ற வீரர்களுடன் தொடர்கிறது என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்