குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று வண்ணாரப்பேட்டை போராட்டக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் "சென்னை வண்ணாரப்பேட்டை ஷாகின்பாக் தொடர் போராட்டத்தின் 32-ம் நாளான இன்று (17.03.2020) இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் ஒருங்கிணைப்புக் குழு கூடியது.
போராடும் மக்களின் கருத்துகள் முழுமையாகக் கேட்கப்பட்டு, ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இந்த மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் ஆபத்துகளை உணர்ந்திருந்தாலும், CAA,NRC,NPRன் ஆபத்துகள் அதை விடக் கொடியது என மக்கள் கருதுகின்றனர்.
ஆகவே தமிழக அரசு உடனடியாக CAA,NRC,NPR எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்தக் குழு போராடும் மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறது. மேலும் மத்திய அரசு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை செயல்படுத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் புதிதாக NPR சேர்க்கப்படுவதை உடனடியாக கைவிட்டு, எப்பொழுதும் போலவே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வேண்டும்". என்று குறிப்பிட்டுள்ளது.