சென்னையில் இருசக்கர வாகன திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சென்னைவாசிகள் குமுறி வருகின்றனர்.
அண்மையில் அயனாவரத்தில் ஒரு புல்லட்டை இரண்டு பேர் திருடும் காட்சிகள் சி.சி.டி.வியில் பதிவாகியிருந்தது. முகக் கவசத்துடன் வந்த இருநபர்கள் சுற்றி நோட்டமிட்டுவிட்டு இருசக்கர வாகனத்தைச் சில நிமிடத்தில் அலேக்காக தூக்கிச் சென்றனர். இருவரும் புல்லட்டை திருடிச் சென்ற அதே நிமிடம் அந்தச் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் வாகனம் கடந்து சென்றதும் அந்த சி.சி.டி.வியில் பதிவாகி இருக்கிறது.
அதேபோல் அண்ணா சாலையில் அதிகாலை நேரத்தில், நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து சாவி இல்லாமல் இரண்டு பேர் திருடிச் சென்றனர். அதேபோல் சென்னை சூளை பகுதியில் நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத ஒருவர், மீன்பாடி வண்டியின் பூட்டை உடைத்து லாவகமாக திருடிச் சென்றார். இந்த காட்சிகள் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது. இப்படி தொடர்ந்து சென்னையில் இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் ஒரேநாளில் குண்டர் சட்டத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 11 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது.
அலெக்ஸ், பாலாஜி, தீனதயாளன், கலைவாணர், லோகநாதன், செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் நடராஜ், பிரேம்குமார், சரவணன், ரமேஷ், ஈஸ்வர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.