Skip to main content

எதிர்பாராத கனமழை... மிதக்கும் குடிசைகள்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

யாரும் எதிர்பார்த்திடாத அளவிற்குப் பெய்து வரும் கனமழையால் டெல்டா மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. மழையுடன் திடீரென வீசிய சூறைக்காற்றுக் குடிசை வீடுகளையும், புயலில் மிஞ்சியிருந்த மரங்களையும் நொருக்கிப் போட்டுவிட்டது.

 

இந்த ஆண்டு வழக்கத்தைத் தாண்டி அதிக மழை பெய்து வருகிறது, வட கிழக்கு பருவமழை தொடக்கத்தில் 'நிவர்' புயல், பிறகு 'புரெவி' புயலால் கனமழை முதல் மிக கனமழை பெய்ததால் டெல்டா மாவட்டங்களையே தண்ணீரில் மிதக்க வைத்தது. அந்த தண்ணீர் வடிவதற்குள் யாரும் எதிர்ப்பார்த்திடாத நிலையில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதியில் இருந்து மீண்டும் கனமழை கொட்டித் தீர்க்கிறது. ஏற்கனவே பெய்த மழையில் கலகலத்துப் போயிருந்தக் குடிசைகளும், மரங்களும் தற்போது பெய்து வரும் பெரும் மழையாலும், சூறாவளிக் காற்றாலும் தூக்கி வீசபட்டுள்ளன.

 

திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே ராமநாதபுரம் கிராமத்தில் நேற்று (12/01/2021) இரவு பெய்த கனமழையுடன் கூடிய சூறைக்காற்றும் வீசியதால், அந்த கிராமத்தில் உள்ள 50- க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளைப் புரட்டிப் போட்டுவிட்டன. மூன்று ஆடுகள் பலியாகியுள்ளன. மேலும் மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. 

 

"கஜா புயல் கூட ஓரிரு நாளில் மொத்தத்தையும் அழிச்சிட்டு போனிச்சி, ஒருவாரம் அழுதுபுறண்டோம், பிறகு எங்களுக்குள் தைரியத்தை உண்டாக்கிக் கொண்டு, அடுத்த கட்டத்திற்குப் போனோம். ஆனால் இந்த ஆண்டு வெறும் மழையாவே பெய்து நீரில் மிதக்க விட்டுடுச்சி ஒரு மாதமா இடைவிடாம பெய்யுது, குடிசை வீடுகளும், மரங்களின் வேர்களும் ஊரிப்போனதால் லேசான சூறாவளிக் காற்றுக்கே தாக்குப் பிடிக்காமச் சாய்ந்துவிட்டது, எங்க வயசுக்கு பொங்கல் வரைக்கும் பெய்யுற கனமழைய இந்த ஆண்டுதான் நாங்க பார்க்குறோம்" என்கிறார்கள் வடபாதிமங்கலம் மக்கள்.

 

இயற்கை, டெல்டா மக்களை வெயிலில் காய்த்து அழிக்கிறது, இல்லை என்றால் மழையாக பொழிந்து அழிக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்