தமிழகத்தில் கரோனா காரணமாக மாவட்ட வாரியாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் மொத்தமாக 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாகச் சென்னையில் 189 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. அதேபோல் மதுரையில் 41, கோவையில் 37, திருப்பூரில் 31 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக உள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 21 இடங்கள் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று உள்ள பட்டியலில் நாளுக்கு நாள் நோய்ப் பாதித்தவர்களின் எண்ணிக்கை சென்னையில் உயர்ந்து வருகிறது. ஊரடங்கு தளத்தப்பட்டுள்ளதால் தொற்று எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள சென்னையில் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் முற்றிலுமாகத் திரும்பியுள்ளனர். கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் பட்டியலில் சென்னைதான் முதல் இடத்தில் இருக்கிறது என்பதை மக்கள் எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும், இந்த நோய்க்கு தடுப்பூசியோ, மருந்தோ கண்டுபிடிக்கவில்லை என்பதால் சமூக இடைவெளி, வீட்டிலேயே இருப்பதைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.