தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையின் மழைபொழிவு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று (01.10.2024) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 39 செ.மீ. ஆகும். இயல்பான மழைப்பொழிவு ஆகும். தமிழகத்தில் மாவட்ட அளவில் எடுத்துக் கொண்டால் தென்மேற்கு பருவமழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட மிக அதிகமாகப் பெய்துள்ளது. 17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை விடக் குறைவாகவும் மழை பெய்துள்ளது.
தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்கள் நீங்கலாக டெல்டா மாவட்டங்களில் மழை இயல்பை விடக் குறைவாகப் பெய்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டுடன் இந்த ஆண்டை ஒப்பிடும்போது தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது. அதாவது தமிழகத்தில் இயல்பை விடக் கடந்த ஆண்டு 8 சதவீதம் அதிகம். இந்த ஆண்டு 14 சதவீதம் மழை அதிகம் பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை என்பது இயல்பை விட 74 சதவீதம் வரை அதிகம் பெய்தது. ஆனால் இந்த ஆண்டு இயல்பை விட 43 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரையில் கேரளா, தமிழகம், தெற்கு கர்நாடகா, ராயல்சீமா மற்றும் ஆந்திராவை உள்ளடக்கிய பகுதிகளில் இயல்பை விட அதிகமாகப் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை வட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பு அல்லது இயல்பை விட அதிகம் பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பு அல்லது இயல்பை விடக் குறைவாகப் பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.