உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 530ஐ கடந்தது.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. நேற்று (24/03/2020) இரவு 12.00 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் பங்க்குகள், ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும் என்றும், வங்கிகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு நாளை மறுநாள் (27/03/2020) மற்றும் 28- ஆம் தேதி விடுமுறை என கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மக்கள் செல்ல அனுமதி இல்லாததால் வியாபாரிகள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு மற்றும் திருச்சி காந்தி உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.