சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி என்.கிருபாகரன் நாளை (20/08/2021) ஓய்வு பெறுவதையொட்டி, பிரிவு உபச்சார விழா இன்று (19/08/2021) சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரிவு உபச்சார விழாவில் பேசிய நீதிபதி என்.கிருபாகரன், "விருப்பு, வெறுப்பின்றி வழக்குகளை கையாண்டது திருப்தி அளிக்கிறது. வளர்ச்சி, கஷ்டமான சூழலில் உறுதுணையாக இருந்த நீதிபதிகள் சுந்தரேஷ், சத்யநாராயணனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டவர், தமது தாய், தந்தையருக்கும் நன்றி" தெரிவித்து கண் கலங்கினார்.
நீதிபதி என்.கிருபாகரன் குறித்து பார்ப்போம்!
1959- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா நெடும்பிறை கிராமத்தில் என்.கிருபாகரன் பிறந்தார். சட்டப்படிப்பை முடித்து 1985- ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, கடந்த 2009- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31- ஆம் தேதி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக என்.கிருபாகரன் நியமிக்கப்பட்டு, 2011- ஆம் ஆண்டு நிரந்தரமாக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 20- ஆம் தேதி அன்று 62 வயது பூர்த்தியடைவதையொட்டி, நாளையுடன் நீதிபதி என்.கிருபாகரன் ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெறுவதால் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் காலியிடங்களின் எண்ணிக்கை 18- ஆக உயர்ந்துள்ளது.