Skip to main content

தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்!! 

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

Chennai High Court orders Chief Secretary

 

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்களையும் மேல் முறையீட்டு மனுக்களையும் 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பாலையன், தனது மகன் பட்டாபிராமனிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்தார். 

 

விண்ணப்பத்தைப் பரிசீலித்த கோட்டாட்சியர், மாதம் 10 ஆயிரம் ரூபாயை ஜீவனாம்சமாக பாலையனுக்கு வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் தனக்கு ஜீவனாம்சம் வழங்கவில்லை எனக் கூறி, திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு மேல் முறையீடு செய்தார். அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், தனது மேல் முறையீட்டு மனுவைப் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி பாலையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனது சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட மகன் பட்டாபிராமன், வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவுபடி ஜீவனாம்சம் வழங்கவில்லை என பாலையன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

 

இதையடுத்து, மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவே பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டம் இயற்றப்பட்டதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இந்தச் சட்டப்பிரிவின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்களையும், மேல் முறையீட்டு மனுக்களையும் முடிவுக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்படுத்துவது அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறுவதற்கு சமம் எனக் கூறி, மனுதாரரின் மேல் முறையீட்டு மனு மீது எட்டு வாரங்களில் முடிவெடுக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

 

மேலும், பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், மேல் முறையீட்டு மனுக்களை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.